உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
பல்லடத்தில் ஓட்டல், பேக்கரிகளில், உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
பல்லடம்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின்பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, பல்லடம் நகர உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பல்லடம் பகுதியில் உள்ள பேக்கரிகள், ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, உணவு தயாரிக்க பயன்படுத்திய எண்ணெய், மீண்டும் பயன்படுத்தப்படுகிறதா? எனவும், உணவு தயாரிப்புக்கு செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்துகின்றனரா? எனவும், மேலும் கொரோனா, தடுப்பு நடவடிக்கைகள், முறையாக கடைபிடிக்கபடுகிறதா? எனவும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது சுமார் 6.5 கிலோ எடையுள்ள கெட்டுப்போன பழங்கள், கலப்பட டீத்தூள், பலகார வகைகள், பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது, மேலும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 450 கிராம் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவு விற்பனையாளர்களும், பாக்கெட்களில் விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களிலும், தெளிவான விபரங்கள் அச்சிடப்பட்டு விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த விதிமுறைகளை மீறினால் உணவுத் தரக் கட்டுப்பாட்டு சட்டம் 2006-ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. உணவு பரிமாறும் போதும், பார்சல் செய்யும்போதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக், பயன்படுத்தக்கூடாது எனவும், உணவு தயாரிக்க பயன்படும் தண்ணீர் தரமானதாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.