சேலத்துக்கு கூடுதலாக 750 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்தன- கலெக்டர் ராமன் ஆய்வு

6 சட்டசபை தொகுதிகளில் வேட்பாளர்கள் அதிகம் என்பதால் சிவகங்கையில் இருந்து சேலத்துக்கு நேற்று கூடுதலாக 750 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்தன.

Update: 2021-03-25 23:17 GMT
சேலம்:
6 சட்டசபை தொகுதிகளில் வேட்பாளர்கள் அதிகம் என்பதால் சிவகங்கையில் இருந்து சேலத்துக்கு நேற்று கூடுதலாக 750 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்தன.
வேட்பாளர்கள்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் 4 ஆயிரத்து 280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வாக்குப்பதிவுக்கு பயன்படுத்துவதற்கு 5 ஆயிரத்து 142 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 5,142 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 5 ஆயிரத்து 740 தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் (விவிபேட்) ஆகியவை கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்து 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 22-ந் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 207 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 
கூடுதல் எந்திரங்கள்
குறிப்பாக, எடப்பாடி தொகுதியில் 28 பேரும், சங்ககிரி தொகுதியில் 23 பேரும், சேலம் மேற்கு தொகுதியில் 28 பேரும், சேலம் வடக்கு தொகுதியில் 20 பேரும், சேலம் தெற்கு தொகுதியில் 24 பேரும், வீரபாண்டி தொகுதியில் 20 பேரும் போட்டியிடுகின்றனர். எனவே, இந்த 6 தொகுதிகளிலும் கூடுதல் வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கூடுதலாக வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படுகிறது.
இதனால் எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கும் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படுவதால் கூடுதலாக வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து நேற்று போலீஸ் பாதுகாப்புடன் தனி லாரியில் சேலத்திற்கு 750 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உடனிருந்தனர்.
இதையடுத்து கூடுதலாக வந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பொறியாளர்கள் மூலம் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் தொடங்கியது. அப்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தியாகராஜன், தனி தாசில்தார் சிராஜூதீன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்