சேலம் அப்பா பைத்திய சாமி கோவிலில் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தரிசனம்

சேலம் அப்பா பைத்திய சாமி கோவிலில் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்தார்.;

Update:2021-03-26 04:06 IST
சேலம்:
சேலம் அப்பா பைத்திய சாமி கோவிலில் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்தார்.
ரங்கசாமி தரிசனம்
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகள் ஒரு அணியாக போட்டியிடுகின்றன. 
புதுச்சேரி அரசியல் தலைவர்களை பொறுத்தவரை அரசியலில் ஒவ்வொரு நகர்வுகளின்போதும் சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்திய சாமி கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஏற்கனவே கடந்த 2-ந் தேதி அப்பா பைத்திய் சாமி கோவிலில் தரிசனம் செய்தார்.
கட்சி வேட்பாளர்கள் பட்டியல்
இந்தநிலையில், நேற்று முன்தினம் மதியம் அவர் மீண்டும் சேலம் வந்தார். பின்னர் அவர் புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது ஜாதகங்களை அப்பா பைத்திய சாமியின் பாதத்தில் வைத்து தரிசனம் செய்தார். 
சுமார் 1 மணி நேரம் வரை ரங்கசாமி கோவிலில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கோவிலை சுற்றி வலம் வந்த அவர் சேலத்தில் இருந்து புதுச்சேரிக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அந்த வெற்றிக்கு சாமியிடம் வேண்டுகோள் வைத்தேன். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் மீண்டும் சேலம் வந்து சாமி தரிசனம் செய்வேன், என்றார்.

மேலும் செய்திகள்