அம்மாபேட்டை அருகே தேர்தல் பறக்கும் படை சோதனை: உரிய ஆவணம் இல்லாததால் ரூ.98 ஆயிரம் பறிமுதல்
அம்மாபேட்டை அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணம் இல்லாததால் ரூ.98 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அம்மாபேட்டை
சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என கண்காணிக்கும் வகையில் இரவு பகலாக தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று மாலை அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட கோனேரிப்பட்டி பிரிவில் பவானி சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அலுவலர் சக்திவேலு தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ரூ.98 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கேசரிமங்கலம் குப்புச்சிபாளையம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் சீரங்கன் (வயது 48) என்பதும், குப்புச்சிபாளையத்தில் இருந்து அம்மாபேட்டைக்கு பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பவானி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.