மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் விழா; பூசாரி மட்டுமே தீ மிதித்தார்

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் பூசாரி மட்டுமே தீ மிதித்தார்.

Update: 2021-03-25 22:00 GMT
தாளவாடி
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் பூசாரி மட்டுமே தீ மிதித்தார். 
மாரியம்மன் கோவில்
ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடியில் கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள மலைக்கிராமம் தாளவாடி. இங்கு பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் திருவிழா கடந்த 23-ந் தேதி சிறப்பு வழிபாட்டுடன் தொடங்கியது.
நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு மலர் மற்றும் ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. 
அம்மன் ஊர்வலம்
இதையடுத்து தாளவாடி மாரியம்மனுடன், கும்டாபுரம் மாரியம்மனும் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் இரவு 9 மணிக்கு அம்மன் வீதி உலா தொடங்கியது. அப்போது அம்மனின் உற்சவ சிலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தாளவாடியில் உள்ள அனைத்து வீதிகளிலும் அம்மன் வீதி உலா நடந்தது. பின்னர் நேற்று காலை 5 மணிக்கு கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க உற்சவ சிலைகள் தாளவாடி ஆற்றுக்கு புறப்பட்டன. கோவிலின் தலைமை பூசாரி சிவண்ணா தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆற்றுக்கு சென்றனர். அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து உற்சவ சிலையை பூசாரி சிவண்ணா தலையில் சுமந்தபடி அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தார். அப்போது பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் பக்தர்கள் 4 பேர் காவல் தெய்வங்கள் வேடம் அணிந்து முன்னே சென்றனர். இதேபோல் குறவர் ஆட்டம் ஆடிக்கொண்டும் பக்தர்கள் சிலர் ஊர்வலத்தில் வந்தனர்.
மலர் பாதை
வழி நெடுகிலும் மாரியம்மனுக்கு பக்தர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். ஆற்றை கடந்து ஊர்வலம் வந்த போது அங்குள்ள விநாயகர் கோவிலின் முன்பு காத்திருந்த பெண் பக்தர்கள் மலர் மற்றும் பழங்கள் படைத்து மாரியம்மனை வழிபட்டனர். 
பின்னர் தாளவாடி பஸ் நிலையம் பகுதியில் மாரியம்மனுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து தலமலை ரோடு, ஒசூர் ரோடு பகுதியிலும் அம்மன் ஊர்வலம் சென்றது. அங்கிருந்து போயர் வீதி, அம்பேத்கார் வீதிக்கு அம்மன் ஊர்வலம் சென்றது. அங்கு மலர்களால் பாதை அமைத்து அம்மனை பக்தர்கள் வரவேற்றனர். இதையடுத்து அங்கிருந்து கோவிலுக்கு அம்மன் ஊர்வலம் சென்றது. 
தீ மிதித்தார்
கோவிலை சென்றடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மேளதாளங்கள், தாரை, தப்பட்டைகள் முழங்க தலைமை பூசாரி சிவண்ணா மாரியம்மன் உற்சவ சிலையை சுமந்தபடி குண்டத்தை நோக்கி சென்றார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி தாயே, மாரியம்மன் தாயே என பக்தி கோஷங்கள் எழுப்பினர். பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த 20 அடி நீள குண்டத்தில் பூசாரி சிவண்ணா இறங்கி தீ மிதித்து நேராக கோவிலின் கருவறைக்கு சென்றார். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பூசாரியை தவிர  பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. பூசாரி குண்டம் இறங்கி முடித்ததும் அதில் பூமாலை, வேப்பிலை, உப்பு, சாம்பிராணி ஆகியவற்றை குண்டத்தில் பக்தர்கள் வீசினார்கள். 
மத நல்லிணக்கம்
இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா ராகவேந்திரா கூறுகையில், ‘தாளவாடி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோவிலின் குண்டம் அருகில் உள்ள முஸ்லிம் மசூதி வரை அமைக்கப்பட்டு உள்ளது. எனவே மத நல்லிணக்கத்துக்கு எடுத்து காட்டாக இந்த குண்டம் விழா நடைபெறுகிறது,’ என்றார். 
விழாவையொட்டி தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு கோவில் விழாவில் கர்நாடக மாநில பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்