திருச்சி பாலக்கரை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்; மேலப்புதூர் மேம்பாலம் வரை அணிவகுத்து நின்ற வாகனங்கள்

திருச்சி பாலக்கரை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மேலப்புதூர் மேம்பாலம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Update: 2021-03-25 21:13 GMT
திருச்சி, 

திருச்சி மாநகரின் மையப்பகுதியாக பாலக்கரை பகுதி உள்ளது. திருச்சி ஜங்ஷனில் இருந்து சத்திரம் பஸ்நிலையம் செல்வதற்கு பழைய மதுரை சாலை பிரதான வழித்தடமாக உள்ளது. இதனால் இங்கு நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதாலும், வணிக நிறுவனங்களுக்கு சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களை மணிக்கணக்கில் நிறுத்திவிட்டு செல்வதாலும் பெரும்பாலும் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை 11.30 மணி அளவில் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து மேலப்புதூர் சுரங்கப்பாதை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நகர முடியாமல் சிக்கி திணறின. வழக்கமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிக்கு உடனடியாக போக்குவரத்து போலீசார் வாகனத்தில் வந்து நெரிசலை சரி செய்வார்கள்.

ஆனால் நேற்று நீண்டநேரமாகியும் அங்கு போக்குவரத்து போலீசார் வரவில்லை. பாலக்கரை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு ஓரளவுக்கு தீர்வு காண முடியும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்