திருச்சியில் வேகமாக பரவுகிறது: பிரபல நகைக்கடை ஊழியரின் தாயாருக்கு கொரோனா தொற்று 42 பேருக்கு பரிசோதனை; 3 நாட்கள் கடை மூடல்
திருச்சியில் பிரபல நகைக்கடை ஊழியரின் தாயாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து 42 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 3 நாட்கள் கடையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சியில் பிரபல நகைக்கடை ஊழியரின் தாயாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து 42 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 3 நாட்கள் கடையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
வேகமெடுக்கும் கொரோனா
இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வெகுவாக குறைந்து வந்த கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுபோல திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்தது. தற்போது சற்று அதிகரித்து இரட்டை இலக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோயை கட்டுப்படுத்த கோவாக்சின், கோவிஷில்டு போன்ற தடுப்பூசிகள் பொதுமக்கள் இலவசமாக செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பலர் அச்சம் காரணமாக இன்னும் தடுப்பூசி போடாமல் இருந்து வருகிறார்கள். உடலில் ஏதாவது மாற்றம் அல்லது காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு போன்றவை இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்துகொள்ள டீன் வனிதா அறிவுறுத்தி உள்ளார்.
ஊழியரின் தாயாருக்கு கொரோனா
திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட 57-வது வார்டு கரூர் பைபாஸ் ரோட்டில் பிரபல நகைக்கடை ஒன்று உள்ளது. அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், நகர்நல அலுவலர் யாழினி மேற்பார்வையில் மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க கடை உரிமையாளர் உட்பட 42 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது.
3 நாட்கள் நகைக்கடை மூடல்
அதை தொடர்ந்து மேலும் 3 நாட்கள் நகைக்கடையை மூடி வைக்கவும் உத்தரவிடப்பட்டது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணியவும் மாநகராட்சி ஆணையரால் அறிவுறுத்தப்படுகிறது. இதை மீறுவோருக்கு அபராதமும் மற்றும் தக்க நடவடிக்கையும் எடுக்கப்படும் என ஆணையர் சிவசுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.