கொரோனா காலத்தில் கட்சி வித்தியாசமின்றி அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கினோம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரசாரம்
கொரோனா காலத்தில் கட்சி வித்தியாசமின்றி அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கினோம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரசாரம் மேற்கொண்டார்.
கோவை,
தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று செல்வபுரம், குனியமுத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த தொகுதியில் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்துள்ளேன். கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் செய்து கொடுத்துள்ளோம். ஏழை மக்கள் அதிகம் வந்து செல்லும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் இதய மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் கண்டறியும் எந்திரம் உள்பட பல நவீன எந்திரங்களை இந்த அரசு வாங்கிக் கொடுத்துள்ளது.
தேர்தல் நேரத்தில் மட்டும் தொகுதி பக்கம் வருபவர்கள் அ.தி.மு.க.வினர் அல்ல. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது இந்த பகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.பி. கொரோனா காலத்தில் மக்களுக்கு ஆறுதல் சொல்ல கூட வரவில்லை. ஆனால் அ.தி.மு.க.வினர் வீடு வீடாக சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்கள். கொரோனா காலத்தில் கட்சி வித்தியாச மின்றி அனைவருக்கும் நிவாரண பொருட்கள் மற்றும் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளோம். தொகுதியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் வீடுகள் கட்டித் தந்துள்ளோம்.
தி.மு.க. தலைவர் மு.க..ஸ்டாலின் என மீது குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு காரணம் ஜெயலலிதா இறந்த பின்னர் இந்த கட்சி உடைவதை தடுத்தேன் என்பது தான். கடந்த 2011-ல் நான் அமைச்சராக இருந்த போது என் மீது எந்த குற்றச்சாட்டையும் அவர் கூறவில்லை. ஆனால் மு.க.ஸ்டாலின் கடந்த 2016-ம் ஆண்டு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பார்த்தார். அதை நாங்கள் முறியடித்தோம். நான் அ.தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருக்கிறேன். அது பிடிக்காததால் என் மீது மு.க.ஸ்டாலின் அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.
எனக்கு எதிராக போட்டியிட இந்த தொகுதி மற்றும் மாவட்டத்திலும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் உள்ளனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் தொண்டாமுத்தூர் தொகுதியில் வாய்ப்பு அளிக்காமல் வெளிமாவட்டத்தில் இருந்து வேட்பாளரை இறக்குமதி செய்து இருக்கிறார்கள். என்னை திட்டு வதற்காகவே அந்த வேட்பாளரை மு.க.ஸ்டாலின் அனுப்பியிருக்கிறார். அவர் என்னை திட்ட திட்ட எனக்கு வாக்குகள் அதிகரிக்க தான் செய்யும். நான் அமைச்சரான பின்னர் கோவையில் எந்த இடங்களிலும் கட்ட பஞ்சாயத்து கிடையாது.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
பிரசாரத்தின்போது நடிகர் ரவி மரியம், சேக்தாவூத் மற்றும் அ.தி.மு.க.கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றிருந்தனர்.