விருத்தாசலத்தை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்

விருத்தாசலம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் உறுதியளித்துள்ளார்.;

Update: 2021-03-25 21:02 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். 
இவர் நேற்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் விருத்தாசலம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட  கு.நல்லூர், புதுக்கூரைப்பேட்டை, குப்பநத்தம், சின்னகண்டியங்குப்பம், காணாது கண்டான், நறுமணம், கச்சிராயநத்தம், இருசாளக்குப்பம், கோபுராபுரம், கவணை, சித்தேரி குப்பம், மாத்தூர், விராரெட்டிகுப்பம், முத்தனங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.  கு.நல்லூரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:- 

முதன்மை தொகுதியாக..

உங்களுக்கு உழைப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன். விருத்தாசலம் தொகுதியை முன்னேற்ற வேண்டும். சாலை, குடிநீர் வசதி உள்பட மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்வதோடு, விருத்தாசலம் தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்ற முதல் வாக்குறுதியை உங்கள் முன் தெரிவித்துக் கொள்கிறேன். விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிப்பதற்கான முயற்சிகளை எடுப்போம். மக்கள் குரலாக என் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும். நமது கட்சி சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஒரே கட்சியான தே.மு.தி.க.வுக்கு மாபெரும் வெற்றியை தாருங்கள். நிச்சயம் வெற்றி பெற்றவுடன் மீண்டும் தங்களை சந்திக்க வருவேன். அனைவரும் முரசு சின்னத்துக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்