மகளிருக்காக தனி நீதிமன்றம் அமைக்கப்படும்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்காக தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என சேத்தியாத்தோப்பில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

Update: 2021-03-25 20:59 GMT
புவனகிரி, 
 
புவனகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் துரை கி.சரவணனை ஆதரித்து கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பில் கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
புவனகிரி தொகுதியில் மீண்டும் தி.மு.க. வேட்பாளர் துரை கி.சரவணன் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். அவர் உங்கள் பகுதியை சேர்ந்தவர். கடந்த சில வாரங்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சரவணனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் வாக்கு கேட்டு உங்களிடம் வருவார். அ.தி.மு.க. அரசு, பாரதீய ஜனதா அரசுக்கு பினாமி அரசாக விளங்கி வருகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் படித்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலை இல்லை. தமிழ்நாட்டில் 3 லட்சத்து 60 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த காலியிடங்கள் நிரப்பப்படும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை மோடியிடம் அடகு வைத்து விடுவார். 

வெற்றி பெற செய்யுங்கள்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் முதியோர் உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும். மகளிர் சுய உதவிக்குழுவிற்கு மானியக் கடன் வழங்கப்படும். புவனகிரி பஸ் நிலையம் புதிதாக கட்டப்படும். மகளிருக்காக தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து புவனகிரி தொகுதி வேட்பாளர் துரை கி.சரவணனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார். 
தேர்தல் பிரசாரத்தின்போது ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்ததால் அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் கூட்ட நெரிசலில் சிக்கியது. இதைபார்த்த கனிமொழி, ஆம்புலன்சுக்கு வழிவிடுமாறு தொண்டர்களிடம் கூறினார். உடனே தொண்டர்கள் ஆம்புலன்சுக்கு வழிவிட்டனர். 

குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை ஆதரித்து குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் தொழில் துறையில் 3-ம் இடத்தில் இருந்த தமிழகம் இன்று 16-ம் இடத்திற்கு சென்று விட்டது. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தி.மு.க. ஆட்சியின்போது குறிஞ்சிப்பாடி தனி தாலுகாவாக மாற்றப்பட்டதோடு, குறிஞ்சிப்பாடி தலைமை மருத்துவமனை, 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது. தொகுதி மக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்பட்டது. தி.மு.க. ஆட்சி வந்தவுடன் குறிஞ்சிப்பாடி தொகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும். குளிர் பதன கிடங்கு, கிடப்பில் போடப்பட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு வரப்படும். வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை சர்வதேச மையமாக மாற்றப்படும். எனவே இந்த தொகுதியில் போட்டியிடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்