மூத்த குடிமக்களுக்கு கிரீடம் அணிவித்து கலெக்டர் கவுரவிப்பு
விருதுநகரில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மூத்த குடிமக்களுக்கு கிரீடம் அணிவித்து கலெக்டர் கவுரவித்தார்.
ிருதுநகர்,
விருதுநகரில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மூத்த குடிமக்களுக்கு கிரீடம் அணிவித்து கலெக்டர் கவுரவித்தார்.
விருதுநகர் கருப்பசாமி நகரில் முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சிறப்பு இல்லங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகத்தில் சமூக நலத்துறையின் சார்பில் மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-
அதிகமாக ஜனநாயக கடமையாற்றிய மூத்த குடிமக்களாகிய உங்களை கவுரவிக்கும் விதமாகவும் தற்போது வாக்குப்பதிவு நடைபெறுவது குறித்து வாக்குச்சாவடி மையங்களில் மூத்த குடிமக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் விரிவாக விளக்குவதே இதன் நோக்கமாகும். மக்களாட்சித் தத்துவத்தில் பிரதிநித்துவம் மிக முக்கியமானது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் உள்ளிட்ட எந்த வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மூத்தகுடி மக்களாகிய நீங்கள் முதல் வாக்கினை பதிவு செய்ய வந்தபோது இருந்த ஆர்வத்தோடு தற்போதும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் மூத்த குடிமக்களுக்கு இருக்கைகள், சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே தாங்கள் தவறாமல் வாக்களித்து வாக்காளர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கவுரவம்
மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நேற்று கருப்பசாமி நகரில் சமூகநலத்துறையின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சமூகநலத்துறை பணியாளர்கள் மூலம் போடப்பட்ட ரங்கோலி கோலங்களை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து சமூகநலத்துறை பணியாளர்கள் கைகளில் வரையப்பட்ட மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை பார்வையிட்டார்.
பின்னர் அதிகமாக ஜனநாயக கடமையாற்றிய மூத்த குடிமக்களுக்கு கலெக்டர் கண்ணன் கிரீடம் அணிவித்து கவுரவப்படுத்தினார்.
கலைநிகழ்ச்சிகள்
இதை தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மூன்றாம் பாலினத்தவரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. சமூகநலத் துறை பணியாளர்களின் பாடல் நிகழ்ச்சி மூலம் 100 சதவீத வாக்குபதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட சமூகநல அலவலர் இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.