குரும்பரின மக்களுக்கு 5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கக்கோரி மனு
குரும்பரின மக்களுக்கு 5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட மக்கள் சமூகநீதி பேரவை செயலாளர் நல்லுசாமி தலைமையில், அந்த அமைப்பின் மாநில இணை செயலாளர் துரைசாமி, மாநில இளைஞரணி செயலாளர் சிவமணி ஆகியோர் முன்னிலையில், அந்த அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க ஊர்வலமாக செல்வதற்காக, பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களில் 2 பேரை மட்டும் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல அனுமதித்தனர். அதன்படி அந்த பேரவையின் மாவட்ட செயலாளர், மாநில இளைஞரணி செயலாளர் ஆகியோர் சென்று பெரம்பலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், சமூக நீதிக்கு விரோதமான அரசாணை 8/21-ஐ ரத்து செய்ய வேண்டும். குரும்பா, குரும்பர், குரும்ப கவுண்டர் ஆகிய உட்பிரிவுகளை ஒரே சாதியாக குரும்பா என்ற பெயரில் அரசு பதிவுகளில் குறிப்பிட வேண்டும். குரும்பரின மக்களுக்கு 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். குரும்பர் உள்ளிட்ட அனைத்து சமூக மக்களுக்கும் தனித்தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர்.