இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு; அண்ணன்-தம்பி உள்பட 5 பேர் கைது
இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது குறித்து அண்ணன்-தம்பி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் புதுத்தெருவை சேர்ந்த வேலுசாமியின் மகன்கள் முருகேசன்(வயது 50), பாலகுரு(40). இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பொதுப்பொருட்களை முருகேசன் எடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த பாலகுருவுக்கும், முருகேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் முருகேசன், அவரது மனைவி பூபதி(47), மகன் பத்மநாபன் (27) ஆகியோரும், பாலகுரு, அவரது மனைவி காந்திமதி (37) ஆகியோரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது தொடர்பாக இருதரப்பினரும் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.