கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் அமைக்கப்படும் - தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் உறுதி
கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் உறுதி அளித்துள்ளார்.
கருங்கல்,
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராஜேஷ்குமார் போட்டியிடுகிறார். அவர், நேற்று ஊரம்பு பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்த அவர், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் எண்ணற்ற பணிகளை செய்துள்ளேன். கிள்ளியூர் சட்டசபை தொகுதி மக்களுக்காக இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. அதனை ஒவ்வொன்றாக நிறைவேற்ற கை சின்னத்துக்கு வாக்குகளை தாருங்கள் என்று பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின் போது காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் பேசும் போது கூறியதாவது:-
கிள்ளியூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கியது முதல் செல்லும் இடமெல்லாம் மக்களின் எழுச்சியை காண முடிகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். குமரி மாவட்டத்தில் படித்த இளைஞர்கள், பெண்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் அரசு பணி கனவில் உள்ளனர்.
தொகுதி மக்கள் பிரதிநிதியாக இருக்கும் நான், அவர்களது கனவை நிறைவேற்றும் வகையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையங்களை தொடங்க நடவடிக்கை எடுப்பேன். அந்த மையங்களில் திறமையான பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். இந்த மையங்கள் மூலம் கிள்ளியூர் தொகுதியில் இருந்து ஏராளமானவர்களை அரசு பணிக்கு அனுப்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.
படித்த இளைஞர்கள், பெண்கள் வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். அவர்கள் உள்ளூரிலேயே அதாவது குமரி மாவட்டத்திலேயே வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தேர்தல் அறிக்கையில் கூறியபடி தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
இதுதவிர பெண்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிள்ளியூர் தொகுதியில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். கிள்ளியூர் தொகுதியில் சப்-கோர்ட்டும், அரசு சட்டக்கல்லூரியும் கொண்டு வரப்படும்.
புற்றுநோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவுக்கு தான் அனைவரும் சிகிச்சைக்காக செல்கின்றனர். குமரி மாவட்ட மக்களின் இந்த குறையை போக்க அரசு புற்று நோய் ஆராய்ச்சி மையம் கொண்டு வரப்படும். அதுவும் கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியிலேயே இந்த ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதவிர இன்னும் ஏராளமான திட்டங்களை கிள்ளியூர் தொகுதிக்கு கொண்டு வர உங்களது வாக்குகளை கை சின்னத்துக்கு தாருங்கள். இதுதவிர நமது மறைந்த எம்.பி. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கும் கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு ராஜேஷ்குமார் பேசினார்.
வேட்பாளர் ராஜேஷ்குமார் செல்லும் இடங்களில் எல்லாம் ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.