கழிவுநீரை அகற்றும் பணியில் மனிதர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
கழிவுநீரை அகற்றும் பணியில் மனிதர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் எச்சரித்து உள்ளார்.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் கழிவுநீர் அப்புறப்படுத்தும் பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
அந்த பயிற்சியை கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
எந்திரங்களைதான் பயன்படுத்த வேண்டும்
கோவை மாநகராட்சி, தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய தூய்மைப்பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் நேர்டு தொண்டு நிறுவனம் இணைந்து கழிவுநீர் அகற்றும் பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 2 நாட்கள் நடக்கிறது.
இதில் முன்எச்சரிக்கையாக செயல்படுவது எப்படி என்பது பற்றி பயிற்சி அளிக்கப்படும். கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாநகராட்சி மற்றும் தனியார் கழிவுநீர் வாகனங்களில் பணிபுரியும் பணியாளர்களை கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடை, நச்சுத்தொட்டி ஆகிய பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.
எந்திரங்களை கொண்டு தான் அடைப்புகளை அகற்ற வேண்டும்.
கடும் நடவடிக்கை
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் சாக்கடை, கழிவுநீர் தொட்டி, நச்சுத்தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும்.
இதற்கான எந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யும்போது, கையுறை, முகக்கவசம், ஹெல்மெட் ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் அணிந்து பணிபுரிய வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் மனிதர்கள் பாதாள சாக்கடை, கழிவுநீர் தொட்டி, நச்சுத்தொட்டிகளில் இறங்க கூடாது. இந்த பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தினால் சம்மந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரத்யேக எண்
தூய்மை பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் அணிந்து பணிபுரிய வேண்டும், இதற்கு என பிரத்யேக தொலைபேசி எண் 0422 14420 மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மரபுசாரா எரிசக்தி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனம், நேர்டு தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் எஸ்.காமராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.