கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.2.25 லட்சம் பறிமுதல்
ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.2.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சிவம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, தர்மபுரி - திருப்பத்தூர் சாலையில், பெங்களூருவைச் சேர்ந்த பிரபு என்பவர் வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.94 ஆயிரத்து 200 வைத்திருந்தது தெரிய வந்தது.
பறிமுதல்
இதே போல், ஊத்தங்கரை அருகே கதவணி சமத்துவபுரம் பகுதியில் பறக்கும் படை அலுவலர் மோகன் தலைமையில் சோதனை நடந்தது. இந்த வாகன சோதனையில், அரூர் அருகே உள்ள நாகமரத்துப்பள்ளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.59 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 200 ஐ, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
3 இடங்களில்....
தேன்கனிக்கோட்டை அருகே டி.தம்மண்டரப்பள்ளியில் பறக்கும் படை அலுவலர் ராகவேந்திரன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஹரீஷ் என்பவர் காரில் வந்தார். அந்த காரை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் ரூ.71 ஆயிரத்து 600 இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மாவட்டம் முழுவதும் நேற்று 3 இடங்களில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதாக ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 800 தொகை பறிமுதல் செய்யப்பட்டது.