புதிய கலெக்டர் எஸ்.நாகராஜன் பொறுப்பேற்றார்
கோவை மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கலெக்டர் எஸ். நாகராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை,
கோவை மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கலெக்டர் எஸ். நாகராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய கலெக்டர் நியமனம்
கோவை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய ராஜாமணி அதிரடியாக மாற்றப்பட்டார். தேர்தலையொட்டி அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று எதிர்க்கட்சிகள் புகார்கள் அளித்திருந்தன.
அதன் அடிப்படையில் அவர் மாற்றப் பட்டார். அவருக்கு பதில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குனராக பணியாற்றி வந்த எஸ்.நாகராஜன் என்பவரை இந்திய தேர்தல் கமிஷன் நியமித்தது.
பொறுப்பேற்றுக் கொண்டார்
அதன்பேரில் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்ட எஸ். நாகராஜன் கோவை வந்தார். அவர் கலெக்டர் அலுவலக அறையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரை கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
கோவை மாவட்டத்தின் 181-வது கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.நாகராஜன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிலானி பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியல் படிப்பும், அமெரிக்காவின் ஹார்டுவார்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பும் படித்துள்ளார்.
இந்திய அளவில் முதலிடம்
கடந்த 2005-ம் ஆண்டு நடந்த இந்திய குடிமைப் பணிக்கான போட்டித்தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்று, ஈரோடு மாவட்ட உதவி கலெக்டராக பயிற்சி பெற்றார்.
அதன் பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சப்-கலெக்டராகவும் சிவகங்கை மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும் பணியாற்றி உள்ளதுடன், மாவட்ட கலெக்டராக வேலூர், கன்னியாகுமரி, தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும் பணிபுரிந்து உள்ளார்.
மேலும், மக்கள் நல்வாழ்வுத்துறையின் கூடுதல் செயலர், உலக வங்கி சுகாதார மேம்பாட்டு திட்ட இயக்குனர், தகவல் தொழில்நுட்ப துறை இணைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை இயக்குனர், ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குனர் ஆகிய மாநில அளவிலான பொறுப்புகளிலும் பணிபுரிந்து உள்ளார்.
இதற்கு முன்பு சென்னையில் தொழில்முனைவோர் மேம்பாட்டு இயக்குனராக பணிபுரிந்து வந்த எஸ்.நாகராஜன் கோவை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.