7 மாதங்களுக்கு பிறகு தானாக வந்து வலையில் சிக்கிய கொலை கும்பல்: ஆற்றில் கொன்று புதைத்த வாலிபரின் அடையாளம் தெரிந்தது கள்ளக்காதலியுடன் கைதான கல்லூரி மாணவர் உள்பட மேலும் இருவருக்கு தொடர்பு
விக்கிரவாண்டியில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து அவரது கணவரை கொலை செய்த வழக்கில் கைதான கல்லூரி மாணவர் அளித்த தகவலின் பேரில் ஆற்றில் கொன்று புதைத்தவரின் அடையாளம் தெரியவந்துள்ளது. 7 மாதங்களுக்கு பிறகு கொலை கும்பல் தானாக வந்து வலையில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் லியோபால் (வயது 33). டிரைவர். இவரது மனைவி சுஜித்ராமேரி(24). இவரது வீட்டின் அருகே வசித்து வரும் கல்லூரி மாணவரான ராதாகிருஷ்ணன்(20) என்பவருக்கும் சுஜித்ராமேரிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை லியோபால் கண்டித்ததால், அவரை கடந்த 4-ந்தேதி வீட்டில் வைத்து கொலை செய்து, தோட்டத்தில் புதைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேரளாவில் பதுங்கி இருந்த கள்ளக்காதல் ஜோடியை கைது செய்தனர்.
மேலும் ஒரு கொலை
கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது, ராதாகிருஷ்ணன், லியோபால் ஆகியோர் சேர்ந்து ஏற்கனவே ஒருவரை அடித்து கொலை செய்து புதைத்தனர். இது யாருக்கும் தெரியவில்லை. எனவே அதே பாணியை பின்பற்றி லியோபாலை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.
இதில் பெரும் அதிர்ச்சி அடைந்த போலீசார், கொலை செய்து புதைக்கப்பட்டவர் யார்? என்பது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார், கைதான ராதாகிருஷ்ணனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஆற்றில் உடல் புதைப்பு
அதில், கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி லியோபால், ராதாகிருஷ்ணன், திருப்பச்சாவடிமேட்டை சேர்ந்த டேவிட் என்கிற கோகுல், கண்டம்பாக்கத்தை சேர்ந்த ஏழுமலை என்கிற அப்பு, பனையுபரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அன்பு(20) ஆகியோர் கூட்டாக சேர்ந்து விழுப்புரம் அடுத்த திருப்பசாவடிமேடு அருகே மது குடித்துள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அன்புவை லியோபாலுடன் ராதாகிருஷ்ணன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து லாரி ஸ்பேனரால் அடித்து கொலை செய்து மரகதபுரம் தென்பெண்னை ஆற்றின் கரையில் பள்ளம் தோண்டி புதைத்தது தெரியவந்தது.
அடையாளம் காட்ட முடியவில்லை
இந்த நிலையில் ஆற்றில் புதைத்த இடத்தை ராதாகிருஷ்ணனிடம் அடையாளம் காட்ட சொன்ன போது, ஆற்றில் சென்ற வெள்ளத்தின் காரணமாக அங்கிருந்த தடயங்கள் அழிந்து விட்டதாக தெரிகிறது. இதனால் எங்கு புதைக்கப்பட்டார் என்பதை அடையாளம் காட்டுவதில் சிக்கல் இருப்பதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அன்பு கொலை வழக்கில் மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சுஜித்ரா மேரி கடலூர் மத்திய சிறையிலும், ராதாகிரஷ்ணன் விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு சிறையிலும், அடைக்கப்பட்டனர். அன்பு உடலை தோண்டி எடுப்பதுடன், இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை கைது செய்த பின்னர்தான் இந்த கொலைக்கான காரணம் என்ன என்கிற முழுவிவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
7 மாதத்துக்கு பிறகு...
அன்பு மாயமாகி 7 மாதங்களுக்கு பின்னர் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில் 7 மாதங்களுக்கு பின்னர், தாங்கள் ஒரு கொலை செய்தோம் என்று வேறு ஒரு வழக்கில் கைதான ராதாகிருஷ்ணன் ஒப்புக்கொண்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.