தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு ரேண்டம் முறையில் பணிகள் ஒதுக்கீடு செய்வது எப்படி அதிகாரி விளக்கம்

தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ரேண்டம் முறையில் பணிகள் ஒதுக்கீடு செய்வது எப்படி? என்பது பற்றி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2021-03-25 17:45 GMT
கோவை

தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ரேண்டம் முறையில் பணிகள் ஒதுக்கீடு செய்வது எப்படி? என்பது பற்றி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

அரசு ஊழியர்கள்

கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணி யில் சுமார் 34 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர். வாக்குச்சாவடி அதிகாரி உள்பட பல்வேறு நிலைகளில் அவர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர். 

இதற்காக அவர்களை பற்றிய விவரங்கள் ஏற்கனவே கேட்கப்பட்டு உள்ளன. 
கொரோனா பரவல் காரணமாக கோவை மாவட்டத்தில் 1,500 வாக்குச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. 

இதனால் மாநில அரசு ஊழியர்கள் தவிர மத்திய அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ரேண்டம் முறையில் பணிகள் ஒதுக்கீடு

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அவர்கள் வசிக்கும் மற்றும் பணி செய்யும் தொகுதியை தவிர மற்ற பகுதிகளில் தேர்தல் பணிகள் ஒதுக்கப்படுகின்றன. 

இதற்காக ரேண்டம் முறை பயன்படுத்தப் படுகின்றன. கணினியில் அரசு ஊழியரின் பெயர் மற்றும் அவருக்கு ஒதுக்க வேண்டிய தேர்தல் பணிகள் பதிவு செய்யப்படும். 

அதன்பின்னர் கணினியே அந்த அரசு ஊழியருக்கு பணியை ஒதுக்கும். ஆனால் அவர் வேலை செய்யும் தொகுதி மற்றும் வசிக்கும் தொகுதி யில் அவர் பணி அமர்த்தப்பட மாட்டார். 

இத்தகைய ரேண்டம் முறையில் தான் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணிகள் ஒதுக்கப் பட்டன. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது-

வேறு தொகுதியில் பணிகள் 

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியருக்கு அங்கு வாக்களிக்க வருபவர்கள் பழக்கம் உள்ளவர்களாக இருக்கக் கூடாது என்பதற்காக வேறு தொகுதிகளில் பணிகள் ஒதுக்கப்படுகின்றன.  

ஏனென்றால் ஏற்கனவே பழக்கம் உள்ளவர்கள் வாக்களிக்க வரும் வாக்காளர்களிடம் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்