விழுப்புரம், மயிலத்தில் ஆவணம் இன்றி கொண்டுசென்ற ரூ.3¾ லட்சம் பறிமுதல்
விழுப்புரம், மயிலத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.3¾ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு கோலியனூர் கூட்டுசாலை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த விழுப்புரம் வண்டிமேட்டை சேர்ந்த கார்த்திகேயன் உரிய ஆவணம் எதுவும் இன்றி ரூ.1 லட்சம் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணைக்கு பின்னர் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி நாராயணமூர்த்தி தலைமையிலான குழுவினர் கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடி அருகில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகரைச் சேர்ந்த அய்யாவு (33) என்பவர் பையில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ஆனால் உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மற்றொரு இடத்தில்
அதேபோல் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் சந்துரு தலைமையிலான குழுவினர் விழுப்புரம்- செஞ்சி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வேலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த காரை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது காரில் கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த வில்லியம்ராஜ் (81) என்பவர் ரூ.68,600-ஐ வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அந்த பணத்தை வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் உள்ள உறவினரின் மருத்துவ செலவிற்காக கொண்டு செல்வதாக அதிகாரிகளிடம் வில்லியம்ராஜ் கூறினார். ஆனால் உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மயிலம்
மயிலம் தொகுதி பறக்கும் படை அலுவலர் பொறியாளர் ஜான்சிராணி தலைமையிலான குழுவினர் நேற்று காலை திண்டிவனம்-வந்தவாசி சாலையில் பெரப்பேரி பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வந்தவாசியில் இருந்து புதுச்சேரிக்கு பால் ஏற்றி சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்த போது வேன் டிரைவர் செட்டிப்பட்டு பகுதியை சேர்ந்த திருகுமரன் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.96 ஆயிரத்து 500-ஐ எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தார் மோகனப்பிரியா மற்றும் தலைமையிடத்து துணை தாசில்தார் ரமேஷ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.