கல்குவாரி குட்டையில் தவறி விழுந்த பெயிண்டர் பலி
ஆண்டிப்பட்டி அருகே கல்குவாரி குட்டையில் தவறி விழுந்த பெயிண்டர் நீரில் மூழ்கி பலியானார்.
ஆண்டிப்பட்டி:
தவறி விழுந்த பெயிண்டர்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு பகுதியில் உள்ள சிலோன் காலனியை சேர்ந்தவர் முருகன்.
இவரது மகன் சத்யராஜ் (வயது27). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் இவர், நேற்று அதிகாலை தனது நண்பர்களுடன் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி பகுதிக்கு சென்றார்.
அப்போது அங்கு பாறை பகுதியில் சத்யராஜ் நடந்து சென்றதாக கூறப்படுகிறது.
அதில் சுமார் 80 அடி உயரத்தில் இருந்து கால் தவறி குட்ைடயில் தேங்கியிருந்த தண்ணீரில் அவர் விழுந்தார்.
உடல் மீட்பு
அந்த குட்டையில் சுமார் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது. இந்த தண்ணீரில் சத்யராஜ் மூழ்கினார்.
உடனே அவருடைய நண்பர்கள் க.விலக்கு போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
குட்ைடயில் உள்ள தண்ணீரில் இறங்கி சத்யராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரணை
சுமார் 4 மணி நேரம் போராடி சத்யராஜின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.