ஊட்டியில் குதிரை பந்தயம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

ஊட்டியில் குதிரை பந்தயம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-03-25 17:01 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது, ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பொழுதுபோக்கும் வகையில் ஊட்டியில் கடந்த 1905-ம் ஆண்டு முதல் குதிரை பந்தயத்தை தொடங்கினர்.

 ஊட்டி நகரின் மத்திய பகுதியில் குதிரை பந்தய மைதானம் உள்ளது. ஊட்டியில் நடைபெறும் பந்தயம் புகழ்பெற்றது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் குதிரை பந்தயம் ரத்து செய்யப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

நடப்பாண்டில் குதிரை பந்தயம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக குதிரை பந்தய மைதானத்தை பராமரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. ஓடுதள புல்வெளியில் தண்ணீர் பாய்ச்சியும், மணல் கொட்டியும் சரி செய்யப்படுகிறது. 

ஓடுதள ஓரத்தில் உள்ள கம்பிகளுக்கு வர்ணம் பூசப்பட்டு உள்ளது. குதிரை பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத், புனே போன்ற இடங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குதிரைகள் பிரத்யேக வாகனங்களில் ஊட்டி குதிரை பந்தய மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

குதிரைகள் பாதுகாப்பாக இருப்பதற்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. குதிரை பந்தய ஓடுதளத்தை சுற்றி 4 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

நவீன கேமராக்கள் மூலம் பந்தயம் பதிவு செய்யப்பட்டு மற்ற இடங்களில் உள்ள குதிரை பந்தய மைதானங்களில் இருந்தவாறு பார்ப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது. வருகிற ஏப்ரல் 14-ந் தேதி முதல் குதிரை பந்தயம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 கொரோனா பரவி வருவதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி இடங்களில் இருந்து குதிரைகளை பந்தயத்துக்கு கொண்டு வருகிறவர்கள், ஜாக்கிகள் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொற்று பரவலை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்