கோத்தகிரியில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீரென சாலை மறியல்
கோத்தகிரியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கேர்பெட்டா பகுதியில் மின்னழுத்த குறைபாடு காரணமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும்,
மேலும் புகார் அளித்தபோது மின்வாரிய பொறியாளர் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கேர்பெட்டா பகுதியில் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், கோத்தகிரி பேரூராட்சி செயல்அலுவலர் மணிகண்டன், மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் மாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் மின்னழுத்த குறைபாடு காரணமாக குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மின் பொறியாளரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
ஆனால் அவர் தரக்குறைவாக பேசியுள்ளார். எனவே அவர் வந்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இதற்கிடையில், மின் பொறியாளர் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அவரை பொதுமக்கள் சிறை பிடித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இயைடுத்து அவரை பொதுமக்களிடம் இருந்து போலீசார் மீட்டனர். மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.