விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை

பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை

Update: 2021-03-25 14:49 GMT
கடலூர், 
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், போட்டியிடுகிறார்.
இதையடுத்து கடந்த 18-ந் தேதி பிரேமலதா விஜயகாந்த், தனது சகோதரர் எல்.கே.சுதீசுடன் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர்களுடன் அ.ம.மு.க. பிரமுகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த நிலையில் சென்னை சென்ற சுதீசுக்கு, கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் சென்று வேட்பு மனுதாக்கல் செய்த பிரேமலதா விஜயகாந்துக்கும் பரிசோதனை செய்ய, கடலூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று  மதியம் பிரேமலதா விஜயகாந்திடம் இருந்து பரிசோதனைக்காக உமிழ்நீர் எடுக்கப்பட்டது. இதேபோல் அவருடன் இருந்த கட்சி நிர்வாகிகள் சிலருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் உற்சாகமடைந்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்றும் கூட்டணி கட்சியினருடன் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்