மீனவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பது அ.தி.மு.க.தான்: ‘நான் இருக்கும் வரை கோவளத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது’; தேர்தல் பிரசாரத்தில் மீனவ மக்களிடம் தளவாய்சுந்தரம் உறுதி
மீனவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக இருப்பது அ.தி.மு.க.தான் என்றும், நான் இருக்கும் வரை கோவளத்தில் சரக்கு பெட்டக துறைமுகம வராது என்றும் தேர்தல் பிரசாரத்தில் தளவாய்சுந்தரம் பேசினார்.
தளவாய்சுந்தரம் பிரசாரம்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் என். தளவாய்சுந்தரம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் நேற்று வாக்கு சேகரித்தார். ராமபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆதலவிளையில் இருந்து தளவாய்சுந்தரம் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி, ராமபுரம், மகாராஜபுரம், லீபுரம் ஆகிய பஞ்சாயத்து பகுதிகளிலும், தேரூர், சுசீந்திரம், அழகப்பபுரம், அஞ்சுகிராமம் ஆகிய பேரூராட்சி பகுதிகளிலும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
தேர்தல் பிரசாரத்தின் போது தளவாய் சுந்தரம் பேசியதாவது:-
அ.தி.மு.க.வின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் ஏராளமான திட்டங்களின் மூலம் மக்கள் பயன் பெற்றுள்ளனர். லேப்-டாப், தாலிக்கு தங்கம், இலவச மிக்ஸி, கிரைண்டர் உள்பட எண்ணிலடங்கா திட்டங்கள் ஆகும். கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு தலா ரூ.1000 வீதம் வழங்கப்பட்டது.
கியாஸ் சிலிண்டர்
அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் குடும்ப தலைவிக்கு தலா ரூ.1,500-ம் 6 சிலிண்டரும், வாஷிங் மெஷினும் வழங்குவதற்கு எடப்பாடி பழனிசாமி முதல் உத்தரவை பிறப்பிப்பார் என்றார்.முன்னதாக தளவாய் சுந்தரத்தை சந்தித்த திருநங்கைகள் தங்களுக்கு தொழில் செய்ய கடன் உதவி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். சாமித்தோப்பு வடக்கு வாசலில் அமைந்துள்ள அன்பாலயம் தலைமை அலுவலகத்தில் ஸ்ரீ குரு சிவச்சந்திர சுவாமிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.தொடர்ந்து பொட்டல்குளம் சந்திப்பில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட தளவாய்சுந்தரம்,
அங்குள்ள மக்களுடன் தரையில் அமர்ந்து குறைகளை கேட்டார்.
துறைமுகம் வராது
பின்னர் அவர் ஆரோக்கியபுரத்தில் தரையில் உட்கார்ந்து மீனவ பெண்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், அவர்கள் மத்தியில் உருக்கமாக பேசினார்.
அவர் கூறியதாவது:-
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை மீனவ மக்களுக்காக அ.தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. மீனவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக இருக்கிறோம். கொரோனா காலத்தில் ஈரானில் தவித்த மீனவர்களை கப்பல் மூலம் மீட்டு கொண்டு வந்த பெருமை, அ.தி.மு.க.வையே சேரும். கோவளத்தில் சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்க கூடாது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை மீனவ பிரதிநிதிகளுடன் சந்தித்து மனு கொடுத்தேன். கடந்த 10 ஆண்டுகளில் வராத சரக்கு பெட்டக துறைமுகம் இனியும் வராது. நான் இருக்கும் வரை கோவளத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது. வரவும் விடமாட்டேன். மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் நிறைவேற்ற விட மாட்டோம். உங்களுக்காக இயங்கும் எங்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை தாருங்கள் என்றார்.