தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்பது உறுதி; ஒட்டன்சத்திரம் வேட்பாளர் அர.சக்கரபாணி பேச்சு
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெறுவதுடன், மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்பது உறுதி என ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் அர.சக்கரபாணி பேசினார்.;
சூறாவளி பிரசாரம்
ஒட்டன்சத்திரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்தநிலையில் நேற்று அவர் வீரப்பட்டி, ஸ்டாலின்நகர், அனுப்பபட்டி, வேலூர், புதுக்கோட்டை, சத்திரப்பட்டி, கோபாலபுரம், சிந்தலவாடிபட்டி, கணக்கன்பட்டி, அமரபூண்டி, வேப்பன்வலசு, பெருமாள்நாயக்கன்வலசு ஆகிய கிராமங்களில் வீடு, வீடாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது மக்கள் மத்தியில் அர.சக்கரபாணி பேசியதாவது:
கடந்த 5 முறை என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்து வெற்றி பெறச் செய்ததற்கு கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தொடர்ச்சியாக 6வது முறையாக தி.மு.க. சார்பில் போட்டியிடும் என்னை மீண்டும் வெற்றி பெற செய்யுங்கள். கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பல்வேறு கிராமங்களில் மண் ரோடாகவும், குண்டும், குழியுமாக காட்சியளித்த சாலைகள் அனைத்தையும் தார்ச்சாலையாக மாற்றி அமைத்துள்ளோம். மஞ்சநாயக்கன்பட்டி முதல் மூலனூர் வரை உள்ள சாலை அகலப்படுத்தப்பட்டது. பழனி ஆயக்குடி முதல் பொருளூர் வரை சாலை விரிவுபடுத்தப்பட்டது. கமலாபுரம் முதல் ஒட்டன்சத்திரம், பழனி, மடத்துக்குளம், பொள்ளாச்சி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
மகத்தான வெற்றி
ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 300 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. 170&க்கும் மேற்பட்ட புதிய பஸ் வழித்தடம் அமைத்து கொடுக்கப்பட்டது. பழனி முதல் சென்னைக்கு புதிய ரெயில் சேவை கொண்டுவரப்பட்டது. மேலும் திண்டுக்கல் முதல் பொள்ளாச்சி வரை சுமார் ரூ.200 கோடி மதிப்பீட்டில் அகல ரெயில் பாதை கொண்டுவரப்பட்டது. மேலும் இது போன்ற எண்ணற்ற பல திட்டங்களை செய்து முடித்துள்ளோம். வருகிற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்பது உறுதி. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஊரக வேலை உறுதித்திட்ட பணி நாட்கள் 100&ல் இருந்து 150ஆக உயர்த்தப்படும். கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு கட்ட மானியம் ரூ.4 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஆகிய 2 இடங்களில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும். ஒவ்வொரு குறுவட்டங்கள் தோறும் நவீன வசதியுடன் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும். மேலும் இத்தொகுதியில் விட்டுப்போன அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.