விராலிமலை தொகுதி மக்களுக்காக உழைத்து கொண்டே இருப்பேன்; அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

விராலிமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான அமைச்சர் விஜயபாஸ்கர் சுற்றுப்பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2021-03-25 02:30 GMT
விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் அருகே  மேலப்பட்டி, சாலைப்பட்டி, மெய்யக்கவுண்டன்பட்டி, வலையப்பட்டி, சரளப்பட்டி, ஈச்சங்குடி, தெற்குப்பட்டி, மேலகோத்திரப்பட்டி, கோவிந்தநாயக்கபட்டி, மலைக்குடிப்பட்டி, கட்டக்குடி, ஆச்சநாயக்கபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  அ.தி.மு.க. வேட்பாளரான அமைச்சர் விஜயபாஸ்கர் சுற்றுப்பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசியதாவது:-

விராலிமலை தொகுதி மக்களுக்காக மெழுகுவர்த்தியை போல் உருகிபணியாற்றி வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் விராலிமலை தொகுதியை மாற்றி காட்டியுள்ளேன். நான் செல்லும் இடமெல்லாம் நீங்கள், எங்கள் வீட்டு பிள்ளை உங்களுக்கு தான் வாக்களிப்போம் என்று கூறுவதை கேட்கும்போது சந்தோஷமாகவும், மனநிறைவாகவும் உள்ளது. நான் என்றும் உங்களுக்காக உழைப்பேன். இன்பத்திலும், துன்பத்திலும் என்றும் உங்களோடு இருப்பேன். விவசாய கடன், நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை அ.தி.மு.க. அரசு வழங்கியுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள 
தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு வாஷிங் மெஷின், ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளில் தொகுதிக்கு கொண்டுவந்துள்ள வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. மேலும் உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன். எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை மக்களுக்காக உழைப்பேன். உங்களுக்காக உழைத்த எனக்கு நீங்கள் ஓட்டளிப்பதே சரியான தீர்ப்பாக அமையும். எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்