தி.மு.க. தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு; தர்மபுரி பிரசார கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என்று தர்மபுரியில் நடந்த பிரசார கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Update: 2021-03-25 01:50 GMT
தர்மபுரி:
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என்று தர்மபுரியில் நடந்த பிரசார கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
தொலைநோக்கு திட்டங்கள்
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஏ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமார் (அரூர்), பா.ம.க. வேட்பாளர்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தர்மபுரி) ஆகியோரை ஆதரித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு தர்மபுரி 4 ரோட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஏழை, எளிய மக்களின் நலனுக்கான நல்லாட்சியை நடத்தினார்கள். 50 ஆண்டுகள், 100 ஆண்டுகளுக்கு பிறகு வரும் எதிர்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் தொலைநோக்கு திட்டங்களை தீட்டி செயல்படுத்தினார்கள். அந்த வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி வழங்கப்பட்டது.
கான்கிரீட் வீடுகள்
தமிழகத்தில் வீடு இல்லாத 12 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை 6 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் கட்டி  கொடுக்கப்பட்டுள்ளன. வருகிற 2023-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஏழை, எளியோர் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டு விடும்.
தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதேபோல் சமூக பாதுகாப்பு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.6 லட்சத்து 87 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. இதன்மூலம் 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு விதை மானியம், உர மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
செல்லாத நோட்டு
இதன் காரணமாக நெல் உற்பத்தியில் கடந்த 6 ஆண்டுகளாக தமிழகம் இந்திய அளவில் முதலிடம் பிடித்து விருதுகளை பெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சியில் நிலம் இல்லாதவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று கூறினார்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்களா?. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு. கள்ள நோட்டு. நமது தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு. மத்தியில் காங்கிரஸ் உடன் தி.மு.க. நீண்ட காலம் கூட்டணியில் இருந்தது. 
ஆனால் தமிழகத்திற்கான வளர்ச்சி திட்டங்கள் அப்போது நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது தமிழகத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இன்னும் 6 மாத காலத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட தொடங்கும்.
நன்மை செய்யும் ஆட்சி
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்ட போது மெரினா கடற்கரையில் 15 லட்சம் பேர் திரண்டு போராடினார்கள். அப்போது ஜல்லிக்கட்டின் சிறப்புகளை பிரதமரிடம் எடுத்து கூறினோம். இதனால் ஜல்லிக்கட்டுக்கான தடைகளை உடைத்து அனுமதி வழங்கியவர் பிரதமர் மோடி. மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. 
தமிழகத்தில் சிறுபான்மை மக்கள் ஒரு தாய் மக்களாக பாதுகாப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். வாக்காளர்கள் தான் எஜமானர்கள். நல்ல தீர்ப்பை வழங்கும் நீதிபதிகள். எனவே தமிழகத்திற்கு நன்மை செய்யும் ஆட்சியை நடத்தியவர்கள் யார்? என்பதை சீர்தூக்கி பார்த்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தொடர ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்