பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பு சென்னை விமான நிலையத்தில் என்ஜினீயா் கைது 8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

நாகையில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்துவிட்டு வெளிநாட்டில் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்துவிட்டு திரும்பி வந்த என்ஜினீயர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-03-25 00:59 GMT
ஆலந்தூர், 

நாகப்பட்டினத்தை சோ்ந்தவா் ரமேஷ் (வயது 30). எலக்டிரிக்கல் என்ஜினீயரான இவர், கடந்த 2013-ம் ஆண்டில் அங்கு நடந்த சாலைமறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக இவா் மீது நாகப்பட்டினம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனா். ஆனால் ரமேஷ், வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டாா்.

இதையடுத்து ரமேசை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, இது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் அவரை பற்றிய விபரங்களை கொடுத்து ‘லுக் அவுட்’ நோட்டீசை வழங்கி இருந்தார்.

இந்த நிலையில் ஓமன் நாட்டு தலைநகா் மஸ்கட்டில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா்.

அப்போது நாகையில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்துவிட்டு 8 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த ரமேஷ், அந்த விமானத்தில் திரும்பி வந்தது தெரிந்தது. அவரை கண்டுபிடித்த குடியுரிமை அதிகாரிகள், விமான நிலையத்தில் இருந்து வெளியில் செல்ல விடாமல் தடுத்து ஒரு அறையில் அடைத்து வைத்தனா்.

இது பற்றி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தனா். அதன்பேரில் நாகப்பட்டினத்தில் இருந்து தனிப்படை போலீசாா் சென்னை வந்து குடியுரிமை அதிகாரிகள் பிடித்து வைத்து இருந்த ரமேசை கைது செய்து அழைத்து சென்றதாக என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்