சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 900 கிலோ வெடிமருந்து பொருட்கள் பறிமுதல்

அவினாசி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையின் போது உரிய ஆவணம் இன்றி சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 900 கிலோ வெடிமருந்து பொருட்கள் சிக்கியது.

Update: 2021-03-25 00:23 GMT
அவினாசி
அவினாசி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையின் போது உரிய ஆவணம் இன்றி சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 900 கிலோ வெடிமருந்து பொருட்கள் சிக்கியது.
வாகன சோதனை
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ளன. நாட்கள் நெருங்க,நெருங்க பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் அவினாசி சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி ஹரிஹரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் குழுவினர் அவினாசி காசிகவுண்டன்புதூர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
 அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வாகனம் வந்தது. அந்த வாகனத்தை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த சரக்கு வாகனத்தில் வெடிமருந்து பொருட்கள் அடங்கிய 35 பெட்டிகள் இருந்தது. அதில் 30 பெட்டிகளில் ஜெலட்டின் குச்சிகளும், 5 பெட்டிகளில் டெட்டனேட்டர்களும் இருந்தது. இவற்றின் மொத்த எடை 900 கிலோ ஆகும். 
வெடிமருந்து பொருட்கள் பறிமுதல் 
இந்த வெடி மருந்துக்கான ஆவணங்கள் உள்ளதா மேலும் எங்கிருந்து எங்கு கொண்டு  செல்லப்படுகிறது என்றும் லாரி டிரைவரான சித்தோடை சேர்ந்த தமிழ்செல்வன் வயது 27 என்பவரிடம்  விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வெடி பொருட்கள் பவானி காலிங்கராயன் பாளையத்திலிருந்து பல்லடத்தில் உள்ள கல்குவாரிக்கு கொண்டு செல்வதும், அவற்றுக்கு முறையான ஆவணங்கள் இ்ல்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த வெடி பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை சரக்கு வாகனத்துடன், அவினாசி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி வாசுகியிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் இந்த வெடி மருந்து பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கலாம் என்றும் சம்பந்தப்பட்ட குடோனில் சென்று சோதனையிட்டால் மேலும் பல லட்சம் மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத வெடிமருந்து பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும், தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்