பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் கதிரவன் ஆய்வு

பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்தார்.

Update: 2021-03-24 23:46 GMT
அந்தியூர்
பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்தார்.  
கலெக்டர் ஆய்வு
அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை கலெக்டர் கதிரவன், அந்தியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் பிரசாந்த் குமார் மிஸ்ரா, அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அந்தியூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் குட்டையூர் மலை கிராமம் உள்ளது. இங்கு 750 மீட்டர் அகலத்திற்கு பாலாறு செல்கிறது. அவற்றை கடந்து வாக்கு எந்திரங்களை எடுத்துச் செல்லவேண்டும். அவற்றை எவ்வாறு கொண்டு செல்கிறீர்கள்? என்று அந்தியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி இளங்கோவிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
கழுதை மேல்...
இதேபோல் அந்தியூரில் இருந்து கத்திரிமலை கிராமம் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கொளத்தூர் வரை போக்குவரத்து பாதை இந்த கிராமத்துக்கு உள்ளது. அதன்பின்னர் பாதை இல்லை. அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கழுதை மீது ஏற்றிதான் கடந்த தேர்தலில் கொண்டு செல்லப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் கழுதை மீதுதான் கொண்டுசெல்லவேண்டும் என்று அதிகாரிகள் கூறினார்கள். அதற்கு கலெக்டர் கதிரவன் வனப்பகுதி வழியாக செல்லும்போது, வனவிலங்குகள் அச்சுறுத்தல் இருக்கும். எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் செல்லவேண்டும் என்று அறிவுறுத்தினார். 
மேலும் அனைத்து வாக்காளர்களுக்கும் குடிநீர் வசதி செய்திருக்கவேண்டும். வெயிலில் யாரும் நிற்காமல் தகுந்த ஏற்பாடுகள் செய்திருக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்