புனித வெள்ளியை முன்னிட்டு ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் சமபந்தி விருந்து

புனித வெள்ளியை முன்னிட்டு ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் சமபந்தி விருந்து நடைபெற்றது.

Update: 2021-03-24 23:45 GMT
ஈரோடு
ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் புனித அமல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தவக்காலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று மாலை சமபந்தி விருந்து நடந்தது. இதை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு திருப்பலி (பூஜை) நடந்தது. ஆலய பங்கு தந்தையும் ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் உதவி பங்கு தந்தை ஜான்சன், அருள் தந்தை பிலிப்ராஜ் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினார்கள். இந்த நிகழ்வில் ஏராளமானவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர்.
வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை திருநாள் நடக்கிறது. அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு அருகில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து குருத்தோலை ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து ஏப்ரல் 1- ந்தேதி (வியாழக்கிழமை) மாலை பாதம் கழுவும் வழிபாடு, நற்கருணை நிறுவுதல், நற்கருணை இடமாற்றம் வழிபாடுகள் நடக்கின்றன. அன்றைய தினம் நள்ளிரவு வரை நற்கருணை ஆராதனை வழிபாடு நடக்கிறது.
2- ந்தேதி புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. பகல் 11 மணிக்கு ஏசுவின் சிலுவை பாடுகளை தியானிக்கும் சிலுவைப்பாதை வழிபாடு நடக்கிறது. மாலையில் திருச்சிலுவை ஆராதனை நடக்கிறது. 3-ந்தேதி இரவு 10.30 மணிக்கு பாஸ்கா விழா மற்றும் அதை தொடர்ந்து ஏசு கிறிஸ்து கல்லறையில் இருந்து உயிருடன் எழுந்த, உயிர்ப்பு பெருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது.

மேலும் செய்திகள்