பண்ணாரி அம்மன் கோவிலில் குழி கம்பம் நடப்பட்டது

பண்ணாரி அம்மன் கோவிலில் குழி கம்பம் நடப்பட்டது.

Update: 2021-03-24 23:45 GMT
சத்தியமங்கலம்
பண்ணாரி அம்மன் கோவிலில் குழி கம்பம் நடப்பட்டது.
குண்டம் திருவிழா
சத்தியமங்கலம்  அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறும். திருவிழாவில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம்  மற்றும் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா தொற்று பரவி வருவதால் மிக எளிய முறையில் குண்டம் விழா நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
குழி கம்பம் நடப்பட்டது
அதன்படி கடந்த 15-ந் தேதி பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட பூச்சாட்டு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சப்பரங்கள் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8 நாட்கள் திருவீதி உலா வரும். ஆனால் இந்த ஆண்டு சப்பரம் வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை கோவிலில் குழி கம்பம் நடப்பட்டது. இதில் சுமார் 25 பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். பின்னர் கோவில் முன்பு வெட்டப்பட்ட குழியில் பூசாரி மற்றும் பக்தர்கள் வேம்பு மற்றும் ஊஞ்ச மரங்களை போட்டு சூடம் ஏற்றி எரிய விட்டார்கள்.
மலைவாழ் மக்கள் நடனம்
அதைத்தொடர்ந்து மலைவாழ் மக்கள் பீனாட்சி வாத்தியம் வாசித்தபடி குழி கம்பத்தை சுற்றி நடனம் ஆடினார்கள். மேலும் எளியமுறையில் பூஜைகள் நடந்தது. வருகிற 30-ந் தேதி அதிகாலை 4 மணி அளவில் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. இதில் பூசாரிகள் மட்டுமே தீ மிதிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்