சேலம் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் 120 களப்பணியாளர்கள்
சேலம் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் 120 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் நாள்தோறும் 200 வீடுகளில் கொரோனா தொற்று ஆய்வு குறித்து மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம்:
சேலம் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் 120 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் நாள்தோறும் 200 வீடுகளில் கொரோனா தொற்று ஆய்வு குறித்து மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
பயிற்சி முகாம்
சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மாநகராட்சி களப்பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் சகாதேவபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
இதில், மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அறிகுறி உள்ளவர்களை கண்டறிவது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள், குடியிருப்பு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள், சிறப்பு மருத்துவ முகாம்கள் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் 120 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வீடு, வீடாக சென்று கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
200 வீடுகளில்
இதற்காக களப்பணியாளர்கள் ஒவ்வொருவரும் நாள்தோறும் 200 வீடுகளில் ெகாரோனா தொற்று கண்டறியும் பணியை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல், இருமல், சளி போன்ற நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ அலுவலர்களுக்கு தெரிவித்து கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பும் பணியை மேற்கொள்ளுவதோடு, வீட்டில் உள்ளவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.
வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்காணிப்பதோடு அல்லாமல், வீட்டில் உள்ள நபர்கள் வெளியில் வராதவாறு கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அப்பகுதியில் மருந்து தெளித்தல் உள்பட சுகாதார பணிகளை உடனடியாக மேற்கொள்ள உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரு தெருவில் 3 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டால் அந்த தெருவை தனிமைப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
தடுப்பு நெறிமுறைகள்
முககவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்பட கொரோனா தடுப்பு நெறிமுறைகள் வணிக வளாகங்கள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் முறையாக கடைபிடிப்பதை இந்த பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு ஆணையாளர் ரவிச்சந்திரன் பேசினார்.
இந்த பயிற்சியில் மாநகர் நல அலுவலர் பார்த்திபன், சுகாதார அலுவலர் ரவிச்சந்தர், மணிகண்டன், மாணிக்க வாசகம், பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.