கோபி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
கோபி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஈரோடு
கோபி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
8 வயது சிறுமி
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் சுரேஸ்குமார் (வயது 32). இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோர் இறந்து விட்டனர். முறையாக எந்த வேலைக்கும் செல்லாமல் தினசரி மதுக்குடிக்கவும், சாப்பிடவும், ஏதாவது காசு கிடைத்தால் போதும் என்று வாழ்ந்து வந்தார். சுரேஸ்குமாரின் பாட்டி வீடு கோபி அருகே கிராமப்பகுதியில் உள்ளது. அடிக்கடி இவர் அங்கே சென்று சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு ஈரோடு வருவது வழக்கம்.
இந்தநிலையில் கடந்த மே மாதம் நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், சுரேஸ்குமாருக்கு சாப்பிடவும், மது குடிக்கவும் போதிய காசு கிடைக்கவில்லை. எனவே அவர் கோபியில் பாட்டி வீட்டுக்கு சென்றார். கடந்த 21-5-2020 அன்று மாலையில் பாட்டி வீடு அருகே நடமாடிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு தெரிந்த ஒரு மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் அவரது மகனின் வீட்டில் குடியிருந்து வந்தார். அங்கு மூதாட்டியின் மகனும், மருமகளும் வேலைக்கு சென்று விடுவார்கள். அவர்களின் 8 வயது மகள் மட்டும் பாட்டியுடன் இருப்பார்.
பாலியல் பலாத்காரம்
சம்பவத்தன்று மூதாட்டியுடன் 8 வயது குழந்தை செல்லவில்லை. எனவே சிறுமி வீட்டில் இருப்பார் என்று யூகித்துக்கொண்ட சுரேஸ்குமார் வேகமாக சிறுமியின் வீட்டுக்கு அத்துமீறி சென்று வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். சிறிது நேரத்தில், சிறுமியின் தந்தை வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீடு பூட்டி இருப்பதை பார்த்தார். சிறுமியின் பாட்டி வெளியே இருந்தார். வீடு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் பயந்து போன தந்தை கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கவில்லை. அது இரும்பு கதவு என்பதால் பலத்த சத்தம் எழுந்தது. அக்கம் பக்கத்தினரும் அங்கே கூடினார்கள்.
சுமார் 10 நிமிடங்களுக்கு பின்னர் கதவை திறந்துகொண்டு சுரேஸ்குமார் வெளியே வந்தார். அவருக்கு பின்னால் சிறுமி வந்தார். அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, சுரேஸ்குமாரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். சிறுமியிடம் தந்தை விசாரித்தபோது, தனியாக இருந்த சிறுமியை சுரேஸ்குமார் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
20 ஆண்டு ஜெயில்
இதுபற்றிய புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் போலீசார் விரைந்து வந்து சுரேஸ்குமாரை கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட சுரேஸ்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதுபோல் சிறுமி இருந்த வீட்டுக்குள் அத்துமீறி சென்ற குற்றத்துக்காக 5 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி 20 ஆண்டு ஜெயில், ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் தலா 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண தொகையாக ரூ.5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆனார். தண்டனை பெற்ற சுரேஸ்குமார் ஏற்கனவே பல வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்ட குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.