ஆட்சியில் அ.தி.மு.க. இருக்கும்போது திட்டங்களை எப்படி தி.மு.க.வினர் கொண்டு வரமுடியும்; அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி

10 ஆண்டுகளாக ஆட்சியில் அண்ணா தி.மு.க. இருக்கும்போது திட்டங்களை எப்படி தி.மு.க.வினர் கொண்டு வரமுடியும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பினார்.

Update: 2021-03-24 23:15 GMT
ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் அ.தி. மு.க. சார்பாக போட்டியிடும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றார். நேறறு கிருஷ்ணாபுரம், சோலைசேரி, தளவாய்புரம், முகவூர், ஜமீன் நல்லமங்கலம், புத்தூர், அருள்புத்தூர், மீனாட்சிபுரம், சொக்கநாதன்புத்தூர், கோவிலூர் ஆகிய கிராமங்களுக்கு சென்று அனைத்து சமுதாய தலைவர்கள், ஊர் நாட்டாமைகள், பொதுமக்களை நேரில் சந்தித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு 
சேகரித்தார். ஒவ்வொறு கிராமங்களிலும் அமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். கிராமங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

கிருஷ்ணாபுரம், தளவாய்புரம், அருள்புத்தூர் உட்பட பல்வேறு கிராமங்களில் அமைச்சர் திண்ணைப் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். மீனாட்சிபுரம், கோவிலூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ பாதிரியார்களை சந்தித்து அமைச்சர் வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் பேசும்போது, தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டும்தான். மத்தியில் மோடி தலைமையிலும் தமிழகத்தில் எடப்பாடியார், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஏழைகளுக்கான ஆட்சி என்றால் அது புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆட்சிதான். 10 ஆண்டுகளாக ஆட்சியில் அண்ணா தி.மு.க. இருக்கும்போது திட்டங்களை மட்டும் தி.மு.க. வினர் எப்படி கொண்டு வரமுடியும். எங்களது அமைச்சரவை கொடுக்காமல் நிதி ஒதுக்காமல் தி.மு.க.வினர் எங்கிருந்து நிதி 
வாங்கி திட்டங்களை கொண்டு வந்ததாக கூறுகின்றனர். 2011ல் சேத்தூரில் பூமிபூஜை போட்டு நான் தொடங்கி வைத்த கூட்டுக்குடிநீர் திட்டத்தை இப்போதுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. நான்தான் கொண்டு வந்தேன் என்று கூறுகின்றார்.

சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம், பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் என ராஜபாளையம் தொகுதிக்கு கடந்த 10ஆண்டுகளில் ஆயிரம் கோடிக்கு மேல் திட்டங்களை நான்தான் கொண்டுவந்துள்ளேன். அ.தி.மு.க. அரசினால்தான் ராஜபாளையம் தொகுதிக்கு திட்டங்கள் கிடைத்துள்ளது. இப்போது எல்லாம் யாரையும் ஏமாற்ற முடியாது. நாட்டு மக்கள் தெளிவாக உள்ளனர். எடப்பாடியார், அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் நல்லாட்சி மீண்டும் தொடர வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். 2006 ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு ஏக்கர் 
நிலம் தருவோம் என்று தி.மு.க.வினர் கூறினார்கள். அரைசென்டு இடம் கூட யாருக்கும் கொடுக்கவில்லை. ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கே.டி.ராஜேந்திரபாலாஜி 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று பேசினார்.

பிரச்சாரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்