மீண்டும் விவசாயி ஆட்சிக்கு வர வாக்களியுங்கள்- டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம்
மீண்டும் விவசாயி ஆட்சிக்கு வர வாக்களியுங்கள் என்று மேட்டூரில் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
மேட்டூர்:
மீண்டும் விவசாயி ஆட்சிக்கு வர வாக்களியுங்கள் என்று மேட்டூரில் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
அன்புமணி ராமதாஸ் பிரசாரம்
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சேலம் மாவட்டம் மேட்டூரில் பா.ம.க. வேட்பாளர் சதாசிவத்தை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தற்போது நடக்கும் தேர்தல் கொரோனா ஆபத்து சூழ்ந்துள்ள நிலையில் நடக்கும் தேர்தல். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்க வேண்டும் என்பதே முக்கியம். தமிழகத்தில் ஒரு விவசாயி குறிப்பாக இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் முதல்-அமைச்சராக ஆட்சி நடத்தி வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியல் வியாபாரி. இந்த தேர்தல் ஒரு அரசியல் வியாபாரிக்கும், விவசாயிக்கும் நடக்கும் தேர்தலாகும்.
விவசாயி வெற்றி பெற வேண்டும்
நம்மில் ஒருவர் தமிழக முதல்-அமைச்சராக வந்துள்ளார். தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதுடன் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை இருந்தது. ஆனால் விவசாயியின் ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
நாங்கள் வாக்காளர்களாகிய உங்களை நம்பி உள்ளோம். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். இதனை கண்டிப்பாக செயல்படுத்துவார். இதேபோன்று ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு விவசாயி மீண்டும் தமிழகத்தை ஆள வேண்டும் என அனைத்து விவசாயிகளும் முடிவு செய்துள்ளார்கள். இவரது ஆட்சிக்காலத்தில் சட்டம்-ஒழுங்கு நன்றாக உள்ளது விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டாக்டர் ராமதாசின் 40 ஆண்டு கால போராட்டத்திற்கு விடிவுகாலம் ஆக தற்போது வன்னிய மக்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார். விவசாயியான தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எப்போது வேண்டுமானாலும் நாம் சந்திக்கலாம். ஆனால் ஸ்டாலினை அவ்வாறு சந்திக்க முடியாது. அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆசிபெற்ற வேட்பாளரான சதாசிவத்தை வெற்றிபெறச் செய்யுங்கள். அவர் வெற்றி பெற்றால் தான் தமிழகத்தில் ஒரு விவசாயி முதல்-அமைச்சராக வர முடியும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
மேச்சேரி
இதேபோல் மேச்சேரியில் பா.ம.க. வேட்பாளர் சதாசிவத்தை ஆதரித்து பேசிய டாக்டர் அன்புமணி ராமதாஸ், வேட்பாளர் சதாசிவம் மேச்சேரியின் மாப்பிள்ளை என்று குறிப்பிட்டார். மேலும், முதல்-அமைச்சர் அறிவித்த திட்டமான இல்லத்தரசிகளுக்கு வாசிங்மிஷின் வழங்கும் திட்டம் மூலம் தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் குறிப்பிட்டு பிரசாரம் செய்தார்.