கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 7 வயது மகனை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 7 வயது மகனை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.;

Update: 2021-03-24 22:57 GMT
சேலம்:
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 7 வயது மகனை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கள்ளக்காதல்
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை அடுத்த எஸ்.பாப்பாரப்பட்டி என்.எஸ்.கே.தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி மைனாவதி (வயது 26). இவர்களுக்கு சசிக்குமார் என்ற 7 வயது மகன் இருந்தான். இந்த நிலையில் மைனாவதிக்கும், அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்து உள்ளனர். இந்த நிலையில் இவர்களின் கள்ளக்காதலுக்கு மகன் சசிக்குமார் இடையூறாக இருப்பதாக மைனாவதி கருதினார். இதையடுத்து தான் பெற்றெடுத்து வளர்த்த மகன் என்றும் பாராமல் தாய் மைனாவதி தனது மகனை கொலை செய்ய திட்டமிட்டார்.
இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ந் தேதி தனது மகன் சசிக்குமாரை பிச்சம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கிணற்று பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு தனது மகனை கிணற்றில் தள்ளி மைனாவதி கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை
இது குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மைனாவதி, அவரது கள்ளக்காதலன் தேவராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் கள்ளக்காதலுக்காக மகனை கொலை செய்த குற்றத்திற்காக மைனாவதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தேவராஜ் விடுதலை செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்