சொன்னதை செய்வோம், செய்வதை மட்டுமே சொல்வோம் ‘‘சைதாப்பேட்டையில் எனது மக்கள் பணி என்றும் ஓயாது’’ தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தீவிர பிரசாரம்

சொன்னதை செய்வோம், செய்வதை மட்டுமே சொல்வோம் ‘‘சைதாப்பேட்டையில் எனது மக்கள் பணி என்றும் ஓயாது’’ தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தீவிர பிரசாரம்

Update: 2021-03-24 22:42 GMT
சென்னை,
சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளராக முன்னாள் மேயரும், எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் களமிறங்கி இருக்கிறார். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் காலை, மாலை என தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், செய்யப்பட்ட சாதனைகளை விளக்கியும், தி.மு.க.வின் தற்போதைய தேர்தல் அறிக்கையை முன்னிறுத்தியும் தொகுதி மக்களிடம் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.

சைதாப்பேட்டையில் செல்லும் இடமெல்லாம் மா.சுப்பிரமணியனுக்கு மக்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைக்கிறது. ஆரத்தி எடுத்தும், பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழித்தும், மலர்கள் தூவியும் மக்கள் அன்புடன் வரவேற்கிறார்கள். பெண்கள், இளைஞர்கள், முதியோர், தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் தினமும் சந்தித்து ‘உதயசூரியன்’ சின்னத்தில் தன்னை வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிதி உதவி, இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 நிதி, பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.4-ம் குறைப்பு, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, கியாஸ் சிலிண்டருக்கு மாதம் ரூ.100 மானியம், கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.24 ஆயிரம் உதவித்தொகை, கோவில்களை மறுசீரமைக்க ரூ.1,000 கோடி நிதி, நீட் தேர்வு ரத்து செய்ய சட்டம், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டேட்டாவுடன் டேப் உள்பட தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்து தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''தி.மு.க.வை பொறுத்தவரை சொன்னதை செய்வோம், செய்வதை மட்டுமே சொல்வோம். அதன்படி தான் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையும் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மக்களின் நல்வாழ்வுக்கான இந்த தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து ஓட்டு கேட்டு வருகிறேன். சைதாப்பேட்டை மக்கள் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். இந்த தொகுதியில் எனது மக்கள் பணிக்கு ஓய்வே கிடையாது, அது இப்பகுதி மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே சைதாப்பேட்டை மக்கள் எனக்கு வாக்களித்து இத்தொகுதி எம்.எல்.ஏ.வாக என்னை தொடர செய்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்'', என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். 

மேலும் செய்திகள்