‘பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி
‘பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பழனி:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன்படி பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரவிமனோகரனை ஆதரித்து, பழனி பஸ்நிலைய ரவுண்டானா பகுதியில் திறந்த வேனில் நின்றபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிக்கூட்டணி. ஆனால் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி தேர்தலுக்கான சந்தர்ப்பவாத கூட்டணி. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசையும், கட்சியையும் விமர்சிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார். திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்.
தி.மு.க. சகாப்தம்
ஸ்ரீரங்கம் கோவில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் ஆகிய இடங்களில் திருநீறு கொடுத்தபோது, அதை கீழே கொட்டி மக்களின் கடவுள் நம்பிக்கையை அவமதித்தார். இவ்வாறு மதங்களை அவமதித்து வந்த ஸ்டாலின் தற்போது கையில் வேலை எடுத்துள்ளார். இதுதான் பழனி முருகனின் சக்தி.
அ.தி.மு.க. உழைப்பால் உயர்ந்த இயக்கம். ஆனால் தி.மு.க. குறுக்குவழியை கையாண்டு வளர்ந்த இயக்கம். இந்த தேர்தலோடு தி.மு.க. சகாப்தம் முடிகிறது. அ.தி.மு.க. அரசு அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
உலகத்திலேயே மாணவர்களுக்காக இலவச மடிக்கணினி வழங்கியது தமிழகத்தில் தான். அ.தி.மு.க. ஆட்சியில் அதிகமான பள்ளி, கல்லூரிகளை நிறுவியுள்ளதோடு, உயர்கல்வி பயில்வதற்கான அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கான எந்தவொரு அடிப்படை வசதியும் நிறைவேற்றவில்லை.
பழனி புதிய மாவட்டம்
தமிழகத்தின் சிறந்த புண்ணியதலம் பழனி. எனவே பழனியை திருப்பதி போல் தரம் உயர்த்தி பிரமாண்ட நகராக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் அனைத்து மக்களும் கொண்டாடும் வகையில் தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பழனி பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான பழனியை தலைமையிடமாக கொண்டு புதிதாக மாவட்டம் உருவாக்கப்படும். இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆத்தூர், நிலக்கோட்டை
இதேபோல் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தேன்மொழி சேகர், ஆத்தூர் தொகுதியில் போட்டியிடுகிற பா.ம.க. வேட்பாளர் திலகபாமா ஆகியோரை ஆதரித்து செம்பட்டியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சாலைகள் சிறப்பாக இருப்பதால் தமிழகத்தில் விபத்துகள் குறைந்துள்ளன. தேர்தல் பிரசாரத்தின்போது என்னையும், அமைச்சர்களையும் பற்றி தான் மு.க.ஸ்டாலின் பேசுவார்.
தி.மு.க. ஒரு கம்பெனி
மக்களைப்பற்றியோ, மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றோ அவர் பேச மாட்டார். அ.தி.மு.க. மீது அவதூறு பரப்பும் மு.க.ஸ்டாலினுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும். தி.மு.க. ஒரு கட்சியே கிடையாது. அது ஒரு கம்பெனி. அது அவங்க குடும்பத்துக்கான கட்சி.
குடும்ப நலனில் மட்டுமே அக்கறை கொண்ட கட்சி. அ.தி.மு.க.வில் சாதாரண அடிமட்ட தொண்டன் கூட உயர் பதவிக்கு வர முடியும். ஆனால் தி.மு.க.வில் அப்படி அல்ல. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது.
2006 முதல் 2011 வரை தமிழகத்தில் மின் தடை இருந்தது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் மின்தடை இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்பட்டது. தி.மு.க.வில் 20 பேரின் வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.1,350 கோடியில் சீரமைப்பு
மு.க.ஸ்டாலின் கனவில் தான் முதல்-அமைச்சராக வர முடியும். நிஜத்தில் முதல்-அமைச்சராக வர முடியாது. தமிழகத்தில் 6 ஆயிரம் ஏரிகள் ரூ.1,350 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளது.
2 ஆயிரம் அம்மா மினிகிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியில் ரூ.600 கோடியில் ெதாழிற்பூங்கா அமைக்கப்பட்டு ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக நிலக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க.வினர் மற்றும் பா.ம.க.வினர் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.