மதுரையில் மீண்டும் ஏறுமுகமானது கொரோனா
மதுரையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் நோய் தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றிட வேண்டும் என்று சுகாதார துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மதுரை,மார்ச்.
மதுரையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் நோய் தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றிட வேண்டும் என்று சுகாதார துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு
மதுரையில் மீண்டும் படிப்படியாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 21 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுபோல் சிலர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள்.
நேற்றுடன் மதுைரயில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 190 ஆக உயர்ந்திருக்கிறது. இதனிடையே நேற்று 15 பேர் நோயில் இருந்து குணம் அடைந்ததை தொடர்ந்து அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 20 ஆயிரத்து 912 பேர் குணமடைந்துள்ளனர்.
கண்காணிப்பு தேவை
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் இருந்து மதுரை நோக்கி வரும் நபர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து விமானத்தில் மதுரை வரும் நபர்களையும் அடையாளம் கண்டு அவர்களையும் கொரோனா பரிசோதனை செய்து மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.
மேலும் இம்மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை அனைவரும் முறையாக கடைபிடிக்க மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் சுகாதார துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.