தமிழகத்தில் நடத்தப்பட்டது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு -கமல்ஹாசன்

தமிழகத்தில் நடத்தப்பட்டது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என்று மதுரையில் கமல்ஹாசன் கூறினார்.

Update: 2021-03-24 19:58 GMT
மதுரை,மார்ச்.25-
தமிழகத்தில் நடத்தப்பட்டது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என்று மதுரையில் கமல்ஹாசன் கூறினார்.
பேட்டி
அருப்புக்கோட்டையில் நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.
மதுரை விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைதான் சிறப்பான தேர்தல் அறிக்கை. அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் என முதல்-அமைச்சர் கூறியிருக்கிறாரே?
பதில்: அவர்களுடைய கடமையை அவர்கள் செய்கிறார்கள். மக்கள் அந்த அறிக்கையை பார்த்து சொல்லும் விமர்சனம் தான் சரியான பதில். நானும் அந்த மக்களில் ஒருவனாக இருக்கிறேன். நானும் அந்த விமர்சனத்தை மக்கள் முன்பு செய்கிறேன்.
தமிழர்கள் மீது மத்திய அரசுக்கு எந்த ஒரு அக்கறையும் இல்லை. தமிழர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் மீது அக்கறை இல்லை என்பதைத்தான் மத்திய அரசு பல நேரங்களில் காட்டுகிறது. இது தேர்தல் காலம் என்பதால் அவர்களுக்கு நன்மை பயக்காது.
இலவச கணினி
கேள்வி: தி.மு.க.வை பற்றி கமல்ஹாசன் விமர்சனம் செய்வதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?
பதில்: வேண்டாம். எடுத்துக்காதீங்க.
கேள்வி: உங்களுடைய தேர்தல் அறிக்கையில் கணினி இலவசமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளீர்களே?
பதில்: வீட்டுக்கு ஒரு கணினி என்பது மின்சாரம் போல் ஆகும். அதுவும் அரசு சொத்து தான். அதன் மூலம் அரசிடம் நேரடியாக பேசலாம். நாங்கள் டிஜிட்டல் முறையில் செயல்படுகிறோம். நாடு முழுவதும் மாற வேண்டும். தமிழ் நாட்டை மாற்ற வேண்டும் என்பதற்காக கணினி வழங்குவதாக அறிவித்துள்ளோம். அதன்மூலம் இடைத்தரகர்களை முற்றிலுமாக தடுப்பதற்கு வழிவகை செய்யப்படும்.
கேள்வி: கருத்து கணிப்பு உண்மையாகுமா?
பதில்: தமிழகத்தில் நடத்தப்பட்டது கருத்து கணிப்பு அல்ல. அது கருத்து திணிப்பு.
இவ்வாறு கமல்ஹாசன் பதில் அளித்தார்.
பின்னர் அவர் அருப்புகோட்டை புறப்பட்டுச் சென்றார்.

மேலும் செய்திகள்