ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு 31-ந் தேதி வரை நடக்கிறது.

Update: 2021-03-24 18:13 GMT
ஊட்டி,

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கடந்த டிசம்பர் 7-ந் தேதி முதல் அரசு கலைக்கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டன. 

மாணவ-மாணவிகளுக்கு சுழற்சி முறையில் சமூக இடைவெளியை பின்பற்றி நேரடியாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா 2-வது அலை பரவி வருகிறது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

செய்முறை தேர்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு மாணவ-மாணவிகள் கல்லூரிகளுக்கு வர வேண்டாம். இணைய வழி வகுப்புகள் மூலம் பாடங்களை படிக்க வேண்டும் என்று அறிவித்து உள்ளது.  இதைதொடர்ந்து நேற்று ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் வருகை மிகவும் குறைவாக இருந்தது.

 இளநிலை 3-ம் ஆண்டு, முதுநிலை 2-ம் ஆண்டு மாணவர்கள் செய்முறை தேர்வுகளுக்காக கல்லூரிக்கு வந்து இருந்தனர். உயிரியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறுகிறது.

 அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், கட்டாயம் முகக்கவசம் அணிந்தும் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டு இருந்தனர்.

மற்ற மாணவர்கள் வரவில்லை

ஆனால் இளநிலை முதலாமாண்டு, 2-ம் ஆண்டு, முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை. அவர்களுக்கு சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் கல்லூரிக்கு வருகை தந்து ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

இதன்மூலம் அவர்கள் மீண்டும் வீடுகளில் இருந்தபடியே கல்வி கற்க உள்ளனர். இதுகுறித்து துறை தலைவர்கள், பேராசிரியர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகம் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

நீலகிரியில் ஊட்டி, குன்னூரில் உள்ள தனியார் கல்லூரிகளிலும் செய்முறை தேர்வு மட்டும் நடக்கிறது. மற்ற மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரவில்லை. அதேபோல் 9, 10, 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் கடந்த 22-ந் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்