ராணுவ வீரர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை
கொல்லங்கோடு அருகே ராணுவ வீரர் வீட்டில் 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அருகே ராணுவ வீரர் வீட்டில் 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த கொள்ளை பற்றி போலீசில் கூறியதாவது:-
ராணுவ வீரர்
கொல்லங்கோடு அருகே சந்தனபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார். இவர், பஞ்சாப்பில் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார். அங்கேயே மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதனால் ராஜகுமார் வீடு பூட்டியே கிடக்கிறது. அதை மாமியார் சாந்தா பராமரித்து வந்தார்.
ராஜகுமார் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளார். அதில் பதிவாகும் காட்சிகளை ஆப் மூலம் செல்போனில் இணைத்து உள்ளார். கடந்த 2 நாட்களாக கண்காணிப்பு கேமரா இயங்காதது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த ராஜகுமார், மாமியார் சாந்தாவை தொடர்பு கொண்டு வீட்டுக்கு சென்று பார்க்க கூறினார்.
15 பவுன் நகை கொள்ளை
அதன்படி, நேற்று காலை ராஜகுமார் வீட்டுக்கு சாந்தா சென்றார். அங்கு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உடனே அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் 15 பவுன் நகை இருந்ததாக ராஜகுமார் கூறினார். ஆனால் அந்த நகையை காணவில்லை. இதனால் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுபற்றி கொல்லங்கோடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.