பல்லடம்
பல்லடம் அருகே மாதப்பூரில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொங்கலூரில் இருந்து மாதப்பூர் வழியாக பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சுரேஷ் குமார் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.56600 வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் காங்கேயம் நத்தக்காடையூரை சேர்ந்த சுரேஷ், சிறு வியாபாரியான இவர் மளிகை பொருட்கள் வாங்க வேண்டி உரிய ஆவணங்களின்றி இந்த பணத்தை எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பல்லடம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசனிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.56600ஐ அரசு கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்தினர்.