தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 41 வழக்குகள்
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பி்ல் கூறியுள்ளதாவது:-
சட்டமன்ற பொதுத்தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதிகள் முழுவதும் தோ்தல் விதிகளை கடைபிடிக்கும் வகையில் முழுமையாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும்படைகுழு, 3 நிலையான கண்காணிப்புக்குழு, 4 வீடியோ மதிப்பீட்டுக்குழு, 1 வீடியோ பார்வையிடும் குழு வீதம் அனைத்து தொகுதிகளிலும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும், கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதிலும் இருந்து பெறப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய தகவலியல் மையம் மூலம் தோ்தல் ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் சிவிஜில் இணையதளம் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் 23.3.2021 வரை விதிமீறல் கண்டறியப்பட்டு 41 வழக்குகள் காவல்துறையின் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கையில் உள்ளது. மேலும், தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் 23.3.2021 வரை 24 புகார்கள் தொலைபேசியின் வாயிலாக பெறப்பட்டு உடனுக்குடன் புகாருக்கு ஏற்ப அருகாமையில் உள்ள பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ மதிப்பீட்டுக்குழு ஆகிய குழுக்கள் மூலம் குறித்த இடங்களுக்கு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையம் மூலம் தோ்தல் ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் சிவிஜில் இணையதளம் வாயிலாக இதுவரை 45 புகார்கள் பெறப்பட்டு அதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.