சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி கடலூரில் மீனவர்கள் தர்ணா போராட்டம்

கடலூரில் மீனவர்கள் தர்ணா போராட்டம்

Update: 2021-03-24 17:34 GMT
கடலூர், 
கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுருக்குமடி வலைக்கு தடை

தமிழகம் முழுவதும் சுருக்குமடி வலையை பயன்படுத்தி, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது. கடலூர் மாவட்டத்திலும் சுருக்குமடி வலையை பயன்படுத்த மீனவர்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் தற்காலிகமாக வலையை பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த 4 படகு உரிமையாளர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இது தவிர அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

போராட்டம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் போராட்டம் நடத்தினர். மேலும் மீனவர்கள் அனைவரும் ஒன்று கூடி சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக முடிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மீனவர்கள் அப்பகுதியில் உள்ள காலிமனையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் அங்கு விரைந்து வந்து  பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே அங்கு வந்த கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், கொரோனா பரவும் நேரத்திலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் கூட்டம் கூடுவது சட்டப்படி குற்றமாகும்.
அதனால் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து செல்லுமாறு கூறி சமாதானப்படுத்தினார். அதனை ஏற்றுக்கொண்ட மீனவர்கள் காலை 9.30 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மீன்பிடிக்க செல்லவில்லை
மேலும் இந்த போராட்டத்தின் காரணமாக சுமார் 300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்கள் படகுகளை கடலூர் துறைமுகத்திலும், தேவனாம்பட்டினம் கடற்கரையோரத்திலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இது பற்றி மீனவர்கள் கூறுகையில், சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். இதில் நாங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ளோம். ஆகவே அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டோம். அடுத்த கட்ட போராட்டம் பற்றி மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து அறிவிப்போம் என்றனர்.

மேலும் செய்திகள்