கோத்தகரியில் படுகர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகை கொண்டாடப்பட்டது
கோத்தகரியில் படுகர் இன மக்களின் பாரம்பரிய உப்பு ஹட்டுவ பண்டிகை கொண்டாடப்பட்டது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் உப்பு ஹட்டுவ பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் காலை படுகர் இன மக்கள் அவரவர் வீட்டில் இருந்து உப்பு, பச்சை கடலை, புல் வகைகள் என கொண்டு வந்தனர்.
பின்னர் அவற்றை ஆற்றில் கரைத்து அதில் இருந்து தண்ணீரை மாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட கல்லில் ஊற்றி மாடுகளுக்கு தண்ணீரை வழங்கி வழிபட்டனர். பின்னர் வீடுகளில் தயாரிக்கப்பட்ட பணியாரங்கள், கோதுமை தோசைகளை (பொத்திட்டு) அவற்றிற்கு தீவனமாக வழங்கினர்.
அதன்பின்னர் மாடுகளை தங்களது கிராமத்திற்கு அருகே உள்ள எம்மட்டி (மாடுகள் மேய்க்கப்படும் இடம்) என்ற இடத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு தொழுவங்களில் அடைத்து, மாடுகளை மேய்ச்சலில் ஈடுபடுத்துவார்கள்.
தொடர்ந்து ஜூன் மாதம் மழை பெய்து, பசுமை திரும்பிய பிறகு மாடுகளை தங்களது கிராமங்களுக்கு அழைத்து வருவார்கள். இந்த பாரம்பரிய வழக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு, பின்பு காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட இலை, நெறி செடிகளை, வீட்டிற்கு கொண்டு சென்று, அதை வீட்டின் முற்றத்தில் செடிகளை தொங்கவிடுவர். இதனால் தங்களுக்கு நோய்கள் வராது என்பது ஐதீகம்.
இந்த பண்டிகை குறித்து படுகர் இன மக்கள் கூறுகையில், மாடுகளுக்கு உப்பு தண்ணீர் குடிப்பதால் அது காலையில் இருந்து இரவு வரை மேய்ச்சலுக்கு எங்கு சென்றாலும் வீட்டுக்கு திரும்பி வரும் என நம்பிக்கையில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டது. மேலும் வீட்டில் பாயாசம் தயாரித்து தங்கள் ஊரில் உள்ள பொதுமக்களுக்கு வழங்குவார்கள்.
இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் படுகர் இனமக்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படுவதுடன், வறட்சி நீங்கி, மழை பொழிந்து, ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிவிக்கின்றனர்.