பந்தலூர் அருகே குடியிருப்பை முற்றுகையிட்ட காட்டு யானைகள்
பந்தலூர் அருகே குடியிருப்பை காட்டு யானைகள் முற்றுகையிட்டன.
பந்தலூர்,
பந்தலூர் அருகே உள்ள கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.1 பத்துலைன்ஸ் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிக்குள் காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
மேலும் குடியிருப்புகளில் உள்ள வீடுகளை சேதப்படுத்தியும் வருகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து அச்சத்துடனே வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 காட்டுயானைகள் குட்டிகளுடன் குடியிருப்பு பகுதியை முற்றுகையிட்டன. இதனால் தொழிலாளர்கள் அவசர தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
தொடர்ந்து காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனவர் சசிகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.