நிலக்கோட்டை அருகே காட்டுப்பகுதியில் கிடந்த கோவில் மணிகள்

நிலக்கோட்டை அருகே காட்டுப்பகுதியில் கோவில் மணிகள் கிடந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-03-24 15:46 GMT
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள நூத்துலாபுரம் ஊராட்சி சின்னமநாயக்கன்கோட்டை காட்டுப் பகுதியில் கோவில் மணிகள் அனாதையாக கிடந்தன. இதுகுறித்து அங்கு ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள் நூத்துலாபுரம் வருவாய்த்துறையினருக்கும், வத்தலக்குண்டு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மொத்தம் 11 கிலோ கொண்ட 16 மணிகள் அங்கு கிடந்தன. அவற்றை கைப்பற்றி நிலக்கோட்டை தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தார் பானுலட்சுமியிடம் ஒப்படைத்தனர். அப்போது நிலக்கோட்டை வருவாய் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதற்கிடையே கோவில் மணிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மணிகளில் ஓட்டுப்பட்டி, நூத்துலாபுரம் என்று முகவரி உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கோவில்களில் யாரேனும் மணிகளை திருடி வந்து வீசிச்சென்றார்களா?  என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் கிடந்த மணிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனால் கோவில் மணிகளை வைத்து பூஜைகள் செய்வதற்காக கொண்டு வந்து போட்டார்களா? என வருவாய்த்துறையினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்